ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியத்தை வலியுறுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்திய உலகின் முதலாவது நாடு என்ற பெயரை ஐஸ்லாந்து பெறுகிறது.
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன் பிரகாரம் சம தொழில் நிலைமைகளில் பெண்களை விடவும் ஆண்களுக்கு அதிக ஊதியம் வழங்குவது சட்டவிரோதமானதாகும்.
இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தண்டப் பண விதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணளவாக 323,000 பேரை சனத் தொகையாகக் கொண்ட ஐஸ்லாந்தானது சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித் தொழிற்றுறை சார்ந்த பலமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
கடந்த 9 வருட காலமாக உலகில் பால்நிலை சமத்துவம் மிக்க நாடாக ஐஸ்லாந்து உலக பொருளாதார மன்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மத்திய வலதுசாரி அரசாங்கத்தினதும் எதிர்க்கட்சியினரதும் ஆதரவுடன் மேற்படி சம ஊதியம் தொடர்பான சட்டமூலம் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து பாராளுமன்றத்தில் 50 சதவீதமான உறுப்பினர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
25 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட கம்பனிகள் அரசாங்க நற்சான்றிதழைப் பெற இந்த சட்டத்திற்கு கீழ்படியும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளதுடன் மீறும் நிறுவனங்கள் தண்டப் பண விதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார வாய்ப்பு ,அரசியல் அதிகாரம் மற்றும் சுகாதாரம் என்பவற்றின் அடிப்படையில் பால்நிலை சமத்துவத்தை அளவிடும் உலக பால்நிலை இடைவெளி அறிக்கையில், பால்நிலை சமத்துவம் தொடர்பில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடாக ஐஸ்லாந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐஸ்லாந்து அரசாங்கமானது 2020 ஆம் ஆண்டுக்குள் அந்நாட்டில் ஊதியம் தொடர்பில் பால்நிலை அடிப்படையில் நிலவும் வேறுபாட்டை முற்றாக நீக்குவதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளது.