ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.
68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலபிரதேச சட்டப்பேரவைக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் இம்மாநிலத்தின் பவோன்டா சாகிப் என்ற இடத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: சீனா ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்குகிறது. ஆனால் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் வெறும் 450 வேலைவாய்ப்புகளை மட்டுமே வழங்கி இளைஞர்களை மோடி அரசு ஏமாற்றிவிட்டது.
பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலால் சாமானிய மக்களுக்கு துயரம் ஏற்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8 -ம் தேதி, நம் நாட்டின் வரலாற்றில் கறுப்பு தினமாகவே அழைக்கப்படும். ம.பி. போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழலை மோடி அரசு கண்டுகொள்வதில்லை. ம.பி.யில் 50 பேரின் மரணம் அரசின் எந்தவொரு கவனத்தையும் பெறவில்லை.
விவசாயிகளின் நிலம் அடகு வைக்கப்பட்டு வரும் குஜராத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சியில் இமாச்சலபிரதேசம் மிகச் சிறப்பாக உள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்காக எங்களின் அரசு 35 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இதனால் ஏழைகள் பலன் அடைந்தனர். ஆனால் தற்போதைய அரசு இந்தப் பணத்தை நானோ கார் தயாரிக்க கொடுக்கிறது.
பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் வருமானம் அபரிதமாக உயர்ந்துள்ளது. பண மதிப்பு நீக்கத்தால் வெளிவந்திருக்க வேண்டிய கறுப்புப் பணம் ஏன் வெளியே வரவில்லை?
‘கடமையை செய், அதன் பலனைப் பற்றி கவலைப்படாதே’ என பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மோடியோ ‘பிறர் உழைப்பின் பலனை அனுபவி, எந்தப் பணி செய்வது குறித்தும் கவலைப்படாதே’ என்கிறார்.
வரும் 2019-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.