அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டமானது ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது.
எனவே இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டிய தேவையில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றை கூறினார், அவர் மேலும் கூறுகையில்,
கஜானாவில் பணம் இல்லை என்று சொல்கின்ற அரசாங்கம், அபிவிருத்தி திட்டங்களையெல்லாம் நிறுத்தியுள்ள அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இந்த வரவு செலவுத்திட்டம் வேடிக்கையானது. எனவே இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டிய தேவையில்லை.
அதேவேளை அரசு ஊழியர்களை சுமை எனக்கூறும் நிதி அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் வாழ முடியாத நிலையை தீர்க்கும் எந்த திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. இந்த வரவு செலவுத்திட்டம் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாகவே உள்ளது.
அரசாங்கம் நிர்ணய விலையை தளர்த்தியுள்ளதால் எந்தப்பொருளையும் எந்த விலைக்கும் விற்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் சாதாரண மக்களின் வாழ்க்கை படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதில் இராணுவத்துக்கு பல கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சி வருமா?யாருடன் போரிடப்போகின்றீர்கள்? இந்தியாவுடனா , பாகிஸ்தானுடனான அல்லது தமிழர்களுடன் போரிடப்போகின்றீர்களா?
பௌத்த விகாரைகளை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் பூர்விக இடங்களில் தொல்லியல் திணைக்களம் விகாரைகளைக்கட்டப்போகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஏனைய மதங்களுக்கு ஏன் சம அந்தஸ்து வழங்கப்படவில்லை? நிதிகள் ஒதுக்கப்படவில்லை? ஏன் இந்த விடயத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் அமுல்படுத்தப்படவில்லை ? இந்த நாடு பௌத்த சிங்கள நாடு என்ற சிந்தனையிலேயே நீங்கள் நடவடிக்கைகளை எடுக்கின்றீர்கள்.
முறையான திட்டமிடல் இல்லாத இயற்கை உர அறிவிப்பினால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தக்காளி இன்று 600 ரூபாவை தாண்டியுள்ளது. தேங்காய் 100 ரூபாவை எட்டியுள்ளது. அனைத்து பொருட்களும் பலமடங்கு விலை அதிகரித்து விட்டன. இந்நிலையில் சாதாரண மக்களின் கூலி கூட்டப்படவில்லை. அவர்களினால் எப்படி வாழ முடியும்?
இன ,மத வெறியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று பொருளாதார நெருக்கடியால் திண்டாடுகின்றது. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.
இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் அரச ஊழியரின் ஓய்வு பெரும் வயதையும் அரசாங்கம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரு பட்டதாரி எப்படி அரச வேளையில் இணைய முடியும்? எமது மீனவர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கம் மட்டுமல்ல நல்லாட்சி அர்சங்கமும் எமது மீனவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]