அரசமைப்புச் சபையால், காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் ஆணையாளர்களாக நியமிப்பதற்கு 7 பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில் அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார் என்று உதயன் நம்பகரமாக அறிந்தான்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து செயற்படும் என்று கூறப்பட்டிருந்தது. எனினும் பணியகம் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை. ஆணையாளர்கள் நியமிக்கப்ப டாமையாலேயே இந்தத் தாமதம் ஏற்படுகின்றது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் ஏழு ஆணையாளர்களைத் தெரிவு செய்வதற்காக, அரசமைப்புச் சபை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி விண்ணப்பங்க ளைக் கோரியிருந்தது. 95க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன.
இந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்த தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரைக் கொண்ட அரசமைப்புச் சபை, ஆணையாளர்களாக நியமிக்கத் தகுதிவாய்ந்த 7 பேரின் பெயர்களை தெரிவு செய்து கடந்த டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி அரச தலைவருக்கு அனுப்பியிருந்தது.