ஆசிரியைகளுக்கு பாடசாலைக்கு அணிந்து செல்வதற்கு சேலை அல்லது ஒசரி தவிர்ந்த ஏனைய ஆடைகளை தெரிவு செய்வதற்கு அனுமதியளிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
‘பாடசாலை கட்டமைப்பானது 42 இலட்சம் மாணவர்களின் ஒழுக்கத்திலேயே தங்கியுள்ளது. பாடசாலை மாணவர்கள் ஒழுக்கத்தில் ஆசிரியர்களையே பின்பற்றுகின்றனர். இவ்வாறிருக்கையில் ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்தால் , மாணவர்களும் அதனையே பின்பற்றுவர்.
எனவே எந்தவொரு காரணத்திற்காகவும் , யார் கோரிக்கை விடுத்தாலும் ஆசிரியைகளின் ஆடைகளில் மாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.’ என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில், ஆசிரியர்களையும் உள்வாங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.
அரச சேவையின் மதிப்பினைப் பாதுகாக்கும் வகையில் பொறுத்தமான ஆடைகளை அணிந்து பணிக்கு வருவதற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதில் ஆசிரியர்கள் உள்வாங்கப்படவில்லை.
தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிக விலைக்கு சேலைகளை கொள்வனவு செய்வதில் ஆசிரியைகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி குறித்த கடிதத்துடன் சேலைக்கு பதிலாக அணிய பரிந்துரைக்கும் ஆடைகளின் மாதிரி புகைப்படங்களும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்திற்கு மகா சங்கத்தினரால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்ததோடு, இது தொடர்பில் ஊடகங்கள் ஆசிரியைகளிடம் அவர்களது நிலைப்பாடுகளை கேட்ட போது அவர்கள் தமக்கு சேலையே உகந்த ஆடையாகும் என்று தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஜோசப் ஸ்டாலின், ‘247,000 ஆசிரியர்களில் 74 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆசிரியைகளாவர். எனவே அவர்களே அவர்களது ஆடை தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டார். இந்நிலையிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.