அரச சார்பற்ற அமைப்புக்களின் நோக்கங்களுக்காகவே ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள். அனைத்து போராட்டங்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்வோம். ஆசிரியர்கள், மற்றும் அதிபர்கள் தங்களின் சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒரு தரப்பினரது குறுகிய அரசியல் நோக்கிற்கு பகடைகளாக வேண்டாம் என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
பல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வீதிக்கிறங்கி போராடவில்லை. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை வினைத்திறனான முறையில் முன்னெடுத்துள்ள வேளையில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்படுவது வெறுக்கத்தக்க செயற்பாடாக கருதப்படும்.
ஆசிரியர்- அதிபர் வேதன பிரச்சினைகளுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்துடன் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கியுள்ளோம். கொவிட் தாக்கத்தின் காரணமாக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஒரு தரப்பினரது கோரிக்கைளை மாத்திரம் நிறைவேற்ற முடியாது என்றார்.