ஆசிரியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
இணையவழி கருத்து கணிப்பு
இதற்கமைய ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் கருத்து கணிப்பொன்றை நடத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இணையவழி மூலம் இந்த கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பல ஆசிரியர்கள் உரிய ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கத் தயக்கம் காட்டுவதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளமையால் இந்தக் கருத்து கணிப்பு நடத்தப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி சீர்திருத்தங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“கல்வி முறையில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. மாணவர்களின் புத்தகங்கள் மும்மடங்கு அதிகரித்துள்ளது.பரீட்சை கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இவ்வாறான நெருக்கடியை பற்றி பேசுவதற்கு பதிலாக, கல்வி அமைச்சு சேலையை தெரிவு செய்துள்ளது.

இந்த நாட்டில் கல்வி சீர்திருத்தங்கள் பற்றி வெளிப்படையாக பேசினோம். அது குறித்து எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது, இலங்கை ஆசிரியர் சங்கம் நாடு தழுவிய இணையவழி கணக்கெடுப்பு ஒன்றை தொடங்கியுள்ளது. ஆசிரியர்களின் கருத்தைக் கேட்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம். 90% ஆசிரியைகளுக்கு இது பிடிக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
எத்தனை பேர் இதை விரும்பவில்லை என்பதை அமைச்சருக்கு தெரிவிப்பதற்காக நாம் இந்த கருத்துக்கணிப்பை முன்னெடுத்துள்ளோம்.”என கூறியுள்ளார்.