ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருதுக்கு இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
82 வயதுடைய பெண் சமூக செயற்பாட்டாளரான கெத்சி சண்முகத்தும் என்பருக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்து- 1957ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் மரணமான ராமன் மக்சாசே நினைவாக, ராமன் மக்சாசே விருது வழங்கப்பட்டு வருகிறது.
மக்சாசே அறக்கட்டளையால் ஆண்டு தோறும் ஆறு துறைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பத்தாண்டு காலப் போரினால், பாதிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்கள், சிறுவர்கள், ஆதரவற்றவர்களுக்கும், போர் வலயத்தில் குண்டு வீச்சுகள் மற்றும் கைது ஆபத்தை எதிர்கொண்டவர்களுக்கும் உளவியல் ஆலோசனைகளை வழங்குபவராகவும், ஆசிரியராகவும் சிறப்பான பணியை ஆற்றியுள்ளமைக்காகவே இந்த விருது கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படுவதாக மக்சாசே அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இந்த விருது மணிலாவில் வரும் ஓகஸ்ட் 31ஆம் நாள் நடைபெறும் நிகழ்வில் வழங்கப்படும்.