தென் கொரியாவின் யெச்சியொன் விளையாடரங்கில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் மேலும் ஒரு தங்கப் பதக்கம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இன்று திங்கட்கிழமை (05) சற்று நேரத்திற்கு முன்னர் நடைபெற்ற 4 x 400 மீற்றர் கலப்பின தொடர் ஓட்டப் போட்டியிலேயே இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

அப் போட்டியை 3 நிமிடங்கள், 25.410 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை அணியினர் தங்கப் பதக்கம் வென்றனர். இது இலங்கை அணியினரால் பதிவு செய்யப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாகும்.
வெற்றிபெற்ற இலங்கை கலப்பின தொடர் ஓட்ட அணியில் வினோத ஆரியவன்ஷ, ஜயேஷி உத்தரா, ஷெஹான் டில்ரங்க, தருஷி கருணாரட்ன ஆகியோர் இடம்பெற்றனர்.
அப் போட்டியில் தென் கொரியாவின் கலப்பின அணியினர் (3:28.293) வெள்ளிப் பதக்கத்தையும் இந்தியாவின் கலப்பின அணியினர் (3:30.129) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்தப் போட்டி முடிவுடன் இலங்கைக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளதுடன் பதக்கங்கள் நிலையில் இலங்கை 4ஆம் இடத்தில் உள்ளது.
ஜப்பான் (8-2-2), சீனா (4-3-2), இந்தியா (3-2-3) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் இருக்கின்றன.