நீர்கொழும்பு கடற்கரையில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற முதலாவது மத்திய ஆசிய கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் மகளிர் பிரிவில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய இலங்கை, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தது.
ஆடவர் பிரிவில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
மாலைதீவுகள், உஸ்பெகிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் மகளிர் பிரிவில் போட்டியிட்டன. இலங்கை சார்பாக 3 ஜோடியினர் பங்குபற்றினர்.
மகளிர் பிரிவில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய இலங்கையின் இரண்டு ஜோடியினர் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றனர்.
இலங்கையின் 3ஆம் இலக்க அணியில் இடம்பெற்ற ஷெஹானி அசங்கா – சுலோச்சனா ஜயவர்தன ஜோடியினரை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடிய இலங்கையின் முதலாம் இலக்க அணியில் இடம்பெற்ற தீபிகா பண்டார – தினேஷா ப்ரசாதனி ஜோடியினர் 21 – 15, 21 – 10 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சம்பியனாகினர்.
தோல்வி அடைந்த இலங்கையின் 3ஆம் இலக்க அணிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.
3 ஆம் இடத்துக்கான போட்டியில் மாலைதீவுகளின் 2 ஆம் இலக்க அணியில் இடம்பெற்ற ஆமினாத் ருதய்னா – ஹவ்வா நஸிமா ஜோடியினரை இலங்கையின் 2 ஆம் இலக்க அணியில் இடம்பெற்ற ஹஷினி மல்ஷா ப்ரியமாலி – சத்துரிகா வீரசிங்க ஜோடியினர் 21 – 04, 21 – 09 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தனர்.
ஆடவர் பிரவில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்ததுடன் ஈரான் தங்கப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கிக்கொண்டது.
இப் பிரிவில் ஈரான், மாலைதீவுகள், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் பங்குபற்றின.
இறுதிப் போட்டியில் இலங்கையின் 2ஆம் இலக்க அணியில் இடம்பெற்ற அஞ்சன சந்தீபன – சந்துன் மதுசன்க ஜோடியினரை எதிர்த்தாடிய ஈரானின் 1ஆம் இலக்க அணியில் இடம்பெற்ற மோஜிடாபா ஆரோ – ஷவ்காட்டி ஷெகாரராயல் ஜோடியினர் 21 – 12, 21 16 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை வென்று சம்பியனாகினர். இலங்கையின் 3ஆம் இலக்க அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
3 ஆம் இடத்துக்கான போட்டியில் ஈரானின் 1ஆம் இலக்க அணியில் இடம்பெற்ற மஹிதி மஹ்பூஸி – அலி கோர்பன்பசாந்தி போட்டியின்றி வோக் ஓவர் முறையில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
அஷேன் ரஷ்மிக்கவுடன் ஜோடி சேர்ந்து விளையாடவிருந்த டிரோன் ஜயதிலக்க காயமடைந்ததால் ஈரானுக்கு வோக் ஓவர் முறையில் வெற்றி அளிக்கப்பட்டது.
இப் போட்டிக்கு மைலோ (நெஸ்ட்லே லங்கா லிமிட்டெட்), டிஎஸ்ஐ, மல்டிலெக் உட்பட இன்னும் சில நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]