நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட் ஆகியோரை விடுவிக்குமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் வியாழக்கிழமை மியான்மரின் இராணுவத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சி கவிழ்ப்புக்கு ஐந்து மாதங்களுக்கு பின்னர் ஆயிரக்கணக்கான பிற கைதிகள் விடுவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெப்ரவரி 1 ஆம் திகதி இராணுவம் ஆட்சியைப் பிடித்து, சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றியதில் இருந்து மியான்மர் கொந்தளிப்பில் உள்ளது.
இந் நிலையில் “தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிப்பதற்கான எங்கள் அழைப்பை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம், அதில் ஜனாதிபதி வின் மைன்ட் மற்றும் மியன்மாரின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோர் அடங்குவர்” என்று குடெரெஸின் இணை செய்தித் தொடர்பாளர் எரி கனெகோ வியாழன்று கூறினார்.
மியான்மர் புதன்கிழமை 2,000 க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தது, அவர்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆளும் இராணுவத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்ள் ஆவார்.