மியான்மர் தேசத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.
அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவில், மியான்மர் நீதிமன்றம் நேற்று ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து கவலையளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறைக்கான செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறைக்கான செய்தி தொடர்பாளர் அமைச்சர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-
மியான்மரில் ஆங் சான் சூகிக்கு சிறைத் தண்டனை உள்பட சமீபத்திய தீர்ப்புகளால் நாங்கள் கலக்கமடைந்துள்ளோம். அண்டை நாடான மியான்மரில் ஜனநாயக மாற்றத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
சட்ட விதி மற்றும் ஜனநாயக செயல்முறை நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் வேறுபாடுகளை வலியுறுத்தும் எந்தவொரு வளர்ச்சியும் ஆழ்ந்த கவலைக்குரியது.
மியான்மர் தேசத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது ஆங் சான் சூகியின் தண்டனை இரண்டு வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]