நவீன கால சமூகத்தில் ஏழைகளையும், செல்வந்தர்களையும் ஆங்கில மொழியே தீர்மானிக்கிறது. ஆங்கில மொழி புலமை உள்ளவர்கள் உயர்மட்ட தொழில்வாய்ப்புக்களை கைப்பற்றிக் கொள்கிறார்கள். இதன் காரணமாகவே தற்போது காளான் பூப்பது போல் சர்வதேச தனியார் பாடசாலைகள் தோற்றம் பெற்றுள்ளன. இலவச கல்வியில் ஆங்கில மொழி கல்வியை விரிவுப்படுத்த புதிய கொள்கைத் திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கல்வித்துறையில் புரட்சி செய்வதற்கு காலமும், அதற்கான மக்களாணையும் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. கல்வித்துறை மேம்பாட்டுக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.
1943 ஆம் ஆண்டு சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கரா ஏழை எளியவர்களின் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்று பாரிய போராட்டத்துக்கு மத்தியில் இலவச கல்வியை சட்டபூர்வமாக அங்கீகரித்தார். சமத்துவத்தை கல்வித்துறையில் இருந்தே ஆரம்பித்தார்.
அக்காலப்பகுதியில் பாடசாலைகளில் ஆங்கில கல்வி முறைமைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இன்று சமூகத்தில் ஏழைகளையும், செல்வந்தர்களையும் ஆங்கில மொழியே தீர்மானிக்கிறது.
ஆங்கில மொழி புலமை உள்ளவர்கள் உயர்மட்ட தொழில்வாய்ப்புக்களை கைப்பற்றிக் கொள்கிறார்கள். இதன் காரணமாகவே தற்போது காளான் பூப்பது போல் சர்வதேச தனியார் பாடசாலைகள் தோற்றம் பெற்றுள்ளன.
சர்வதேச தனியார் பாடசாலைகளின் அதிகரிப்பை தொடர்ந்து தேசிய பாடசாலைகளில் ஆங்கில மொழி தொடர்பில் தற்போது விசேட அவதானம் செலுத்தியுள்ளது.
ஆங்கில மொழி தெரியாமல் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானம், சட்டம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தேர்ச்சிப்பெறுவது கடினமானது.
இலங்கை அரசியலமைப்பில் ஆங்கில மொழி இணைப்பு மொழியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலை கல்வி முறைமையில் ஆங்கில கல்வியை வரையறுக்காமல் விரிவுப்படுத்த வேண்டும்.
ஆங்கில மொழி தொடர்பில் ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட வேண்டும். சகல தரங்களிலும் இருந்து ஆங்கில மொழியை கற்பிக்க புதிய கொள்ளை திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.