புதுமுக நடிகர் தீரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சாலா’ எனும் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணி பால் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சாலா’ எனும் திரைப்படத்தில் தீரன், ரேஷ்மா, சார்லஸ் வினோத், ஸ்ரீ நாத், அருள்தாஸ், சம்பத் ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீஸன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து படத்திற்கு தணிக்கை சான்றிதழும் பெறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஓகஸ்ட் மாதம் முதல் திகதியிலிருந்து தொடங்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”பாடசாலையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் மதுபான கடையையும், மது அருந்தும் கூடத்தையும் அகற்றுவதற்காக போராட்டம் நடத்தும் மாணவர்கள் – ஆசிரியர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் நாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை. இந்தக் கதை மதுபானக் கூடங்கள் அதிகரித்து வரும் தமிழகத்திற்கு கட்டாயமாக தேவைப்படும் என்பதால், அதனை ஜனரஞ்சகமான திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.