ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை, இது குறித்து பிஷன் சிங் பேடி, ‘அஸ்வின் வேறு ஒரு நிலையில் உள்ள பவுலர்’ என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பிஷன் சிங் பேடி கூறியதாவது:
அஸ்வின் பிறரை ஒப்பிடும்போது வேறு ஒரு தரநிலையில் உள்ள ஸ்பின்னர் ஆவார். நான் அஸ்வினாக இருந்தால் ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகளில் ஆட முடியாதது குறித்து தூக்கத்தை இழக்க மாட்டேன்.
அஸ்வின் புத்திசாலியான பவுலர். அஸ்வின் எப்போதுமே விக்கெட்டுகள் வீழ்த்துவதில் கவனம் செலுத்துபவர், எப்படியாவது விக்கெட் என்றுதான் அவர் வீசுகிறார், இது பாராட்டத்தகுந்ததாகும். ஸ்பின் பந்து வீச்சை பேட்ஸ்மென்களுக்குத் தக்கவாறு வீசுவதில் அஸ்வின் அபாரமாகத் திகழ்பவர்.
டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர்கள் வீசுகிறோம் என்றால் 12 ஓவர்களை பயிற்சியில் வீச வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் 25-30 ஓவர்கள் வீச வேண்டி வரும்போது பயிற்சியில் இதை விட மூன்று மடங்கு அதிக ஓவர்களை வீச வேண்டும். இப்படி பயிற்சி செய்தால்தான் கட்டுக்கோப்பும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்.
அஸ்வின் வெளிநாடுகளில் விக்கெட்டுகள் வீழ்த்தக் கஷ்டப்படுகிறார் என்பது ஊடக ஊதிப்பெருக்கலே. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தான் விக்கெட்டுகள் வீழ்த்த முடியும் என்று அஸ்வின் நினைத்தால் அதை அவர் டெஸ்ட் போட்டிகளில் செய்ய வேண்டும், ஒருநாள், டி20 போட்டிகளில் அல்ல.
இவ்வாறு கூறினார் பிஷன் சிங் பேடி.