உலகிலுள்ள பல பிரதான நாடுகள் இலங்கை செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினரின் வருகை இலங்கை பாதுகாப்பான நாடு என்ற வலுவான செய்தியை முழு உலகுக்கும் கொடுத்துள்ளது.
அத்துடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வருகை மூலம் 2.5 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கவுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொதுச் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடனான கிரிக்கெட் தொடர்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் அனுசரணையாளர்களை அறிமுகம் செய்யும் ஊடக மாநாடு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இன்று திங்கட்கிழமை (06) முற்பகல் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சவால்களும் சிரமங்களும் சூழந்துள்ள எமது நாட்டுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினரை நம்பிக்கையுடனும் நேர்மறையான சிந்தனையுடனும் இங்கு அனுப்பிவைக்க முன்வந்த கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கும் அவுஸ்திரேலிய அரசுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நன்றியுடைதாக இருக்கின்றது என மொஹான் டி சில்வா மேலும் கூறினார்.
அவுஸ்திரேலியாவுடனான மூவகை சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இலங்கை கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் நன்மை தரும் என அவர் குறிப்பிட்டார்.
‘அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கு வருகை தந்து மூவகை கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளமை இலங்கை கிரிக்கெட் துறைக்கு மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியில் இலங்கைக்கு சிறந்த பலாவலன்களை ஈட்டிக்கொடுக்கும்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் விஜயத்தின் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கும்.
அது இலங்கை பொருளாதாரத்துக்கு வலுச் சேர்ப்பதாக அமையும். மேலும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் வருகையின் மூலம் இலங்கை பாதூகப்பான நாடு என்பது உறுதிப்பட்டுள்ளது.
எனவே எமது நாட்டுக்கு வெளிநாட்டு உல்லாச பயணிகள் தாராளமாக வருகை தர முடியும் என்ற செய்தியையும் அவுஸ்திரேலியர்கள் வழங்கியுள்ளனர்’ எனவும் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவின் யோசனைக்கு அமைய டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் முழு இலாபத் தொகையையும் நாட்டு மக்களின் நலன்புரி விடயங்களுக்காக விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிப்பதற்கு நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் பாகிஸ்தான் அணியின் வருகை, ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி, லங்கா பிறீமியர் லீக் ஆகியவற்றின் மூலமும் இலங்கைக்கு மில்லியன் கணக்கான டொலர் வருவாய் கிடைக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தலைப்பு அனுசரணையாளர்களான தாராஸ் ஸ்ரீலங்கா நிறுவனம், டெஸ்ட் போட்டிக்கான தலைப்பு அனுசரணையாளர்களும் வெளிநாட்டு விஜயங்களின் போது அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களுமான மூஸ் குளோதிங் நிறுவனம், தேசிய கிரிக்கெட் அணியின் அனுசரணையாளர்களான டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் ஆகியவற்றை மொஹான் டி சில்வா புகழ்ந்து பாராட்டினார்.
அனுசரணையார்கள் சார்பில் டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தின் குறியீடு மற்றும் ஊடகப் பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷா சமரநாயக்க, தாராஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹேஷான் பெரேரா, மூஸ் குளோதிங் நிறுவனத்தின் சத்தைப்படுத்தல் தலைமை அதிகாரி கித்மிணி டி சில்வா ஆகியோர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டிருந்தனர்.