இலங்கை அணி கடந்தவருடம் அவுஸ்திரேலியாவிற்கு ரி20 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிதிமோசடிகளில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை நாடாளுமன்றம் அடுத்தவாரம் விவாதிக்கவுள்ளது.
ஆகஸ்;ட் 8 ம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தின் போது விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில கேள்விகளை எழுப்பவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சிஐடியிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளேன் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகிகள் 67 மில்லியனை செலவிட்டுள்ளனர்,தலைவர் சமி சில்வா 11.7 மில்லியனை செலவு செய்துள்ளார்,என செலவிடப்பட்ட தொகைக்கான விபரங்களை வெளியிட்டுள்ள அவர் விசா விடயங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
32 வீரர்கள் உட்பட 52 பேருக்கு விசாவிற்கான கடிதத்தை வழங்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் தொடர்பற்ற 35 பேருக்கு விசாவழங்குமாறு அவுஸ்திரேலியதூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 21 பேர் சமிசில்வாவின் உறவினர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.