இந்த குளிர்கால ஆஷஸ் தொடர அனுமதிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு தனது கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டோம் ஹாரிசன் அழுத்தம் கொடுத்துள்ளார்.
பல இங்கிலாந்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆஷஸ் தொடருக்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதன் பின்னர், கடுமையான தனிமைப்படுத்தலுக்கு தள்ளப்பட்டால் சுற்றுப்பயணத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாட்டின் கடுமையான நிலைப்பாட்டை மென்மையாக்காத வரை தொடர் குறித்த சாதகமான முடிவு ஆபத்தில் இருப்பதாகவும் ஹாரிசன் வலியுறுத்தினார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவதால் எழும் சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
அதே நேரத்தில் சுமார் 38,000 அவுஸ்திரேலியர்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் உலகின் மிகக் கடுமையான கொவிட் -19 கட்டுப்பாடுகள் உள்ளன.
இந் நிலையில் எதிர்வரும் டிசம்பர் 8 முதல் 2021 ஜனவரி 18 வரை ஐந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________