தன்னை பற்றி பேசிய நடிகை சோனம் கபூரை விளாசியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனுஸ்ரீ தத்தா-நானா படேகர் பற்றிய சர்ச்சை குறித்து பேசினார். குயீன் படத்தில் நடித்த போது இயக்குனர் விகாஸ் பெஹல் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை தைரியமாகக் கூறிய கங்கனா ரனாவத்தைபாராட்ட வேண்டும். இருப்பினும், சில நேரங்களில் கங்கனாவின் பேச்சை நம்ப முடியாது என்றார்.
நான் இந்தியா சார்பில் பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு பேசியுள்ளேன். என் திறமைக்காக அந்த மாநாடுகளுக்கு அழைக்கப்பட்டேன். என் அப்பா மூலம் நான் பிரபலமாகவில்லை. (சோனம் கபூரின் அப்பா பிரபல நடிகர் அனில் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது) நான் 10 ஆண்டுகள் போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளேன். சோனம் கபூர் சிறந்த நடிகை இல்லை. இது போன்ற ஆட்கள் என்னை பற்றி பேச என்ன உரிமை உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரையும் அழித்துவிடுவேன் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனுஸ்ரீ கூறுவது எல்லாம் பொய் என்று தெரிவித்த நானா படேகர் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இன்று நடக்கவிருந்த செய்தியாளர்களின் சந்திப்பை அவர் ரத்து செய்துவிட்டார். செய்தியாளர்களை சந்தித்து தன் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவேன் என்று நானா முன்பு தெரிவித்தார்.
விகாஸ் பெஹல் மீது கங்கனா புகார் தெரிவித்ததை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகையும் அவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். தனுஸ்ரீயை பார்த்து பிற நடிகைகள் தங்களுக்கு நடந்த பிரச்சனை குறித்து துணிச்சலாக வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனம் கபூர் தன்னை பற்றி கூறியதை கேட்ட கங்கனா ரனாவத் கோபம் அடைந்துள்ளார். சோனம் கபூர் யார் என்னை பற்றி கருத்து கூற?. அவர் நடிப்புக்காக பெயர் போனவர் இல்லை. மேலும் அவர் சிறந்த பேச்சாளரும் இல்லை. நான் கூறிய புகார் பற்றி அவருக்கு அப்படி என்ன சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம் என்று விளாசியுள்ளார் கங்கனா ரனாவத்.