அவசியம் ஏற்பட்டால் உடனடியாக புதிய அரசாங்கமொன்றை உருவாக்க தன்னால் முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், தூய்மையற்ற அரசாங்கமொன்றை உருவாக்க தாம் தாயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து இலங்கை செயற்குழுக் கூட்டம் என்பன பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போதே கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தூய்மையற்ற அரசாங்கமாக இருந்ததன் காரணமாகவே, கடந்த அரசாங்கத்திலிருந்து தாம் வெளியேறியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். தற்போது இருக்கும் இடமும் தூய்மையற்றது எனில், தம்மால் அங்கு இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கமொன்றை தாம் நிறுவினால், தூய்மையான அரசாங்கமொன்றைத் தவிர, தூய்மையற்ற அரசாங்கத்தை அல்ல என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.