இஸ்ரேலின்தாக்குதலில் ஏற்கனவே தனது குடும்பத்தவர்கள் பலரையும்இழந்த அல்ஜசீரா ஊடகவியலாளர் வயல்டாவ்டோ இஸ்ரேலின் தாக்குதலில் பத்திரிகையாளரான தனது மகனை இழந்துள்ளார்.
காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் வயல்டாவ்டோவின் மகன் ஹம்சாவும் ( 27) முஸ்தபா டுரையா என்ற ஊடகவியலாளரும் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசாவின் தென்மேற்கில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள அல் மவசிக்கு அருகில்உள்ள பகுதியை நோக்கிவாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
குண்டுவீச்சினால் இடம்பெயர்ந்த மக்களை பேட்டி காண்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தவேளையே ஹம்சாவின் வாகனம் தாக்கப்பட்டுள்ளது.
தனது மகனின் உடலை அடக்கம்செய்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள வயல்டாவ்டோ இன்று காசாவில் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து நாளாந்தம் விடைபெறுபவர்களில் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தில் மற்றுமொருவரை இழந்த துயரத்தை அனுபவிக்கின்ற போதிலும் காசாவில் என்ன நடக்கின்றது என்பதை உலகிற்கு தெரியப்படுத்தும் பாதையை தொடரப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்சாவே எனக்கு அனைத்துமாகயிருந்தான் எனதுமூத்த மகன் இதுஇழப்பின் கண்ணீர் பிரிதலின் துயரத்தின் கண்ணீர் என அவர் தெரிவித்துள்ளார்.