போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி மாகந்துர மகேஷூம், மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்ட அர்ஜீன் மகேந்திரனும் சமநீதியில் தண்டிக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்டவர்களை டுபாயில் இருந்து கொண்டுவர முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், ஏன் இந்த மத்திய வங்கி ஊழலில் தொடர்புபட்டுள்ள அர்ஜீன் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரமுடியாது?
தென்னாசியாவிலேயே இடம்பெற்ற மிகப்பெரும் ஊழல் இந்த மத்தியவங்கி ஊழல். இந்த ஊழலுடன் சம்மந்தப்பட்டவர்கள் இன்னமும் சட்டத்தின்முன் நிறுத்தப்படவில்லை. இவர்கள் மோசடி செய்த 11 ஆயிரம் கோடி ரூபாவுக்கான பணத்தை இன்று செலுத்திக் கொண்டிருப்பவர்கள் சாதாரண பொதுமக்கள்.
நாட்டினது ஜனநாயகத்தைக் காப்பாற்ற உச்சநீதிமன்றம் வரை போயிருக்கின்றோம் என மார்தட்டிக் கொள்கின்ற அதே சமயம், இந்த மத்திய வங்கி ஊழல் தொடர்பான விடயத்தில் ஏன் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கின்றது?” என நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.