காவல்நிலையத்தில் புகார் அளித்தவரை அரை நிர்வாணபடுத்தி விசாரணை செய்த ஆய்வாளருக்கு மனித உரிமை ஆணையம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
சென்னை நகரில் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் டிடிகே சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் ரமேஷ் குமார் என்பவர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக தண்ணிர் வசதிகள் செய்யப்படுள்ளன. இவர்களுக்கு மெட்ரோ வாட்டர் தண்ணிர் வழங்கி வருகிறது.
ரமேஷ்குமாரின் பக்கத்து குடியிருப்பில் கீதா என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு குடியேறினார். அவர் தண்ணீர் வரியை செலுத்தவில்லை. அதனால் மெட்ரோ வாட்டர் நிறுவனம் தண்ணீர் இணைப்பை துண்டித்தது. அதனால் கீதா ரமேஷ்குமரின் இணைப்பில் இருந்து அனுமதி இன்று தண்ணீர் எடுத்துள்ளார்.
ரமேஷ்குமார் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் கீதா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர் விஜய பாண்டியன் ரமேஷையும் அவர் மகனையும் காவல்நிலையத்துக்கு அழைத்துள்ளார். அவர்கள் இருவரையும் அரை நிர்வாணமாக்கி விசாரணை செய்துள்ளார்.
இதை ஒட்டி ரமேஷ் குமார் தன்னையும் தனது மகனையும் அரை நிர்வாணப்படுத்திய உதவி ஆய்வாளர் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். மனித ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் இது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் உதவி ஆய்வாளருக்கு ஆணையம் ரு. 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. அதை அவரிடம் இருந்து பெற்று பாதிக்கப்பட்டவருக்கு 4 வாரத்துக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.