இதுவரை, பத்து `பெண்கள் உலகக்கோப்பை’ கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதில், எட்டு முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா; ஆறு முறை சாம்பியன். ஆண்களுக்கான உலகக்கோப்பை, 1975-ம் ஆண்டுதான் நடந்தது. ஆனால், பெண்கள் உலகக்கோப்பை அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே தொடங்கிவிட்டது. அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து 45 ஆண்டுகளாக பெண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ராஜ்ஜியம்தான்.
இதோ இப்போது, 11-வது உலகக்கோப்பை க்ளைமாக்ஸை நெருங்கியிருக்கிறது. மீண்டும் சாம்பியனாகத் துடிக்கிறது ஆஸ்திரேலியா. அதற்கு தேவை இரண்டே வெற்றிகள்தான். முதலில் இந்தியாவை ஜெயிக்க வேண்டும். அடுத்ததாக இங்கிலாந்தைத் துவைக்க வேண்டும். “எங்களின் திட்டத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எந்த நாளாக இருந்தாலும் எந்த பிட்ச்சாக இருந்தாலும் நாங்கள் எங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்தி சிறந்த ஆட்டத்தை விளையாடுவோம். நிச்சயமாக வெல்வோம்” – இதைச் சொன்னது ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் நிகோலா போல்ட்டன். “இந்திய அணியை, அரை இறுதியில் எளிதாக வென்றுவிடுவீர்களா?” எனச் செய்தியாளர் கேட்டதற்குத்தான் இப்படிச் சொன்னார் நிகோலா.
இதே கேள்வியை சற்று மாற்றி, இந்திய அணியை நோக்கித் திருப்புவோம். ஆஸ்திரேலிய அணியை அவ்வளவு எளிதில் வென்றுவிடுமா மிதாலி அணி?
இந்த உலகக்கோப்பைக்கு, தகுதிச் சுற்றில் ஆடிதான் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் உள்ளே வந்தன. இரு அணிகளும் மற்றவர்களுக்கு அதிர்ச்சித் தோல்விகளைப் பரிசளித்து, அரை இறுதிக்குள் நுழைந்திருக்கின்றன. அரை இறுதியில் கடைசி நிமிடத்தில் தோற்று அழுகையோடு வெளியேறியிருக்கிறது தென் ஆப்பிரிக்கா. இன்று இரண்டாவது அரை இறுதிப் போட்டி நடக்கிறது.
மோதப்போவது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்.
உலகக்கோப்பை தொடங்கும் முன்னராகவே `இந்திய அணி, மிகவும் சவாலான அணியாக இருக்கும்’ என எல்லோரும் கணித்திருந்தார்கள். அதேபோல லீக் சுற்றில் நன்றாகவே ஆடியது இந்தியா. முதல் நான்கு போட்டிகளில் அபாரமாக வென்று, அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளிடமும் தோற்றது. அரை இறுதிக்குச் செல்லுமா என்பதே சந்தேகமாக இருந்த நிலையில் நியூசிலாந்தை இடதுகையில் டீல் செய்துவிட்டு ஆஸ்திரேலியாவோடு அரை இறுதியில் மல்லுக்கட்ட ரெடியாகியிருக்கிறது.
இந்திய அணியின் தொடக்கம் கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஸ்மிருதி மந்தனாவும் சரி, பூனம் ராவுத்தும் சரி, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒரு போட்டியில் அடித்தால் மற்றொரு போட்டியில் சொதப்புகிறார்கள். ஸ்மிருதி, முதல் இரண்டு போட்டிகளில் அதிரடித்தார்; அதன் பிறகு அடங்கிப்போனார். பூனம் ராவுத் பொறுப்பான பேட்ஸ்வுமன். அவர் அரை இறுதியில் நிலைத்து நின்று ஆடுவது அவசியம். லீக் சுற்றில் விக்கெட் விழுந்துவிடுமே என அதீத கவனத்துடன் மெதுவாக பேட்டிங் செய்தது இந்திய அணி. அதுவே கடைசியில் மிதாலி டீமுக்குப் பின்னடைவாகிப்போனது. ஆகவே, அரை இறுதியில் ஸ்மிருதியின் அதிரடி இந்தியாவுக்கு அவசியம் தேவை.
நடுவரிசையில் மிதாலி ராஜ் மிரட்டுகிறார். இதுவரை ஏழு போட்டிகளில் மூன்று அரை சதம் மற்றும் ஒரு சதம் உள்பட 356 ரன்கள் எடுத்திருக்கிறார். பெண்கள் அணியைப் பொறுத்தவரை அவர்தான் அணியின் சுவர். மிதாலிக்கு எதிரில் ஒரு பேட்ஸ்வுமன் அபாரமாக ஆடிக்கொண்டிருந்தால் போதும். நிச்சயம், இந்தியா 270 ரன்களுக்கு மேல் குவித்துவிடும். மிதாலியைத் தவிர மற்ற பேட்ஸ்வுமன்கள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை ஆடவில்லை. எனினும் ஒவ்வொரு போட்டியிலும் ஏவரேனும் ஒருவர் சிறப்பாக பேட்டிங் செய்துவிடுகிறார்கள் . ஹர்மன்ப்ரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேவைப்படும்போது கைகொடுக்கிறார்கள். விக்கெட் கீப்பர் சுஷா ஷர்மா பேட்டிங்கில் அவுட் ஆஃப் பார்மில் இருக்கிறார்.
ஆல்ரவுண்டர் டிப்பார்ட்மென்டில் தீப்தி ஷர்மா நன்றாகவே செயல்படுகிறார். மிதாலி இவரைச் சரியாக பேட்டிங்கில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதிரடியாக ஆடக்கூடிய தீப்தி ஷர்மாவை மூன்றாவது நான்காவது விக்கெட்டுக்கு இறக்கினால், இந்திய அணிக்குக் கூடுதல் ரன்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நாளை மேட்ச் நடக்கவிருக்கும் டெர்பி மைதானம் இந்தியாவுக்குச் சாதகமானது. லீக் சுற்றில் இங்கு விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றியைச் சுவைத்தது இந்திய அணி. சற்றே ஸ்லோ பிட்ச்சாக இருக்கக்கூடிய டெர்பி மைதானத்தில் இந்தியா வெற்றிபெற பந்து வீச்சாளர்கள் அதிகம் பங்களிக்கவேண்டியிருக்கும்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ராஜேஸ்வரி அபாரமாக பந்து வீசினார். லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் கவனமாகவே விளையாடியது. ஃபீல்டிங்கில் இந்தியா துடிப்பாகச் செயல்பட்டால், ஆஸ்திரேலியாவை நிச்சயம் அடக்க முடியும். இன்றைய தினம் டாஸ் மிக முக்கியமான பங்கை வகிக்கும். டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது டி 20 தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
ஆஸ்திரேலியா, அபாயகரமான அணிதான்; அசுர வலிமையோடு வளைய வருகிறதுதான். அதற்காக வெல்ல முடியாத அணி அல்ல. இந்த உலகக்கோப்பையில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவும் ஒரு போட்டியில் தோற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து ஜெயித்தது. இந்திய அணி லீக் சுற்றின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்தைக் காலி செய்தது. இந்தியாவின் முன் இப்போது இருக்கும் சவால்கள் இரண்டுதான். ஒன்று, ஏற்கெனவே வாங்கிய அடியை ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பிக் கொடுப்பது. மற்றொன்று, இங்கிலாந்தை மீண்டும் வெற்றிக்கொள்வது. இது கடினமான டாஸ்க்தான். இருப்பினும், நம் ராணிகள் ஜெயித்து மகுடம் சூடுவார்கள் என தாராளமாக நம்பலாம்.