அரையிறுதியில் அமெரிக்கா, கொலம்பியா அணிகள்
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் ஈக்வேடார் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அமெரிக்கா 21 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சியாட்டில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா – ஈக்வேடார் அணிகள் மோதின.
இதில் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் பாபி வுட், ஈக்வேடார் வீரர்களின் தடுப்புகளை லாவகமாக ஏமாற்றி பந்தை வலது புறத்தில் நின்ற ஜோன்ஸிடம் அனுப்பினார்.
அவர் கொடுத்த கிராஸை பெற்ற கிளின்ட் டெம்ப்சே தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார். டெம்ப்சே அடித்த கோலால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது.
அதேபோல் 65வது நிமிடத்தில் மேட் பெஸ்லர் பந்தை கயாஸி ஸார்டெஸிடம் தூக்கி அடிக்க அவர் தலையால் முட்டி டெம்ப்சேக்கு அனுப்பினார். அவர் பந்தை இலக்கை நோக்கி உதைத்தார். அதனை கோலாக மாற்றினர் கயாஸி ஸார்டெஸ்.
74வது நிமிடத்தில் ஈக்டோவர் அணிக்கு அராயோ ஒரு கோல்அடித்தார். தொடர்ந்து போராடிய போதும் ஈக்டோவர் அணியால் சமன் செய்ய முடியவில்லை. முடிவில் அமெரிக்கா 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அதேபோல் நேற்று நடந்த இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியா- பெரு அணிகள் மோதின. முதல் இரண்டு பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
“ஸ்டாப்பேஜ்” நேரத்திலும் இதே நிலை தொடர, “பெனால்டி ஷூட் அவுட்” முறைக்கு ஆட்டம் கொண்டு செல்லப்பட்டது. இதில் கொலம்பியா அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.