அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான நடிகர் கார்த்தி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
‘ராட்சசி’ படத்தை இயக்கிய இயக்குநர் சை. கௌதம் ராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.
இந்த திரைப்படத்தில் அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனீஸ் காந்த், சரத் லோகித்சவா, ராஜசிம்மன், யார் கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் ‘கொல பண்றது வீரமில்ல.. பத்து பேரை காப்பாத்துறது தான் வீரம் ‘. என்று அருள்நிதி பேசும் வசனம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.