சந்தஹிருசேய தூபியை அண்மித்தாக நிர்மாணிக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லினை நேற்றைய தினம் (10) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நாட்டி வைத்தார்.
அருங்காட்சியக கட்டிடக்கலையில் வரலாறு, வழிபாடு, உன்னத பெறுமை, கவர்ச்சி மற்றும் மகிமையினை பிரதிபளிக்கும் கருத்துக்களை வழங்கக் கூடியவாறு நிர்மாண பணிகளை முன்னெடுக்குமாறு சந்தஹிருசேய அருங்காட்சியக கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அத்தோடு தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பாதுகாப்புச் செயலாளர் ஆய்வு செய்தார்.
இதன்போது தற்போது மும்முரமாக இடம்பெற்று வரும் சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பாதுகாப்புச் செயலாளருக்கு சுருக்கமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன், முகப்பு அமைத்தல், சன்னதி அறை, தேவதா கொட்டுவ, முன்மொழியப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள், கல்வெட்டுகள், வேலைப்பாடுகள் மற்றும் சிற்பக் கலைப் பணிகள், முன்மொழியப்பட்ட அருங்காட்சியகத்தின் கட்டுமானம் மற்றும் அருங்காட்சியகத்தின் உட்கட்டமைப்பு ஏற்பாடு என்பன இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்புப்படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, 21வது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்னநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.