அரியாலை கில்லாடிகள் – 100இன் மூன்றாவது பருவகால கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்ற இணுவில் யுனைடெட் ஸ்டார்ஸ் AKSL 3.0 சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளது.
அரியாலை கில்லாடிகள் மென்பந்து கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இணுவில் யுனைடெட் ஸ்டார்ஸ் அணியும் காளிகிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டி கடந்த ஜூன் 30ஆம் திகதி அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இணுவில் யுனைடெட் ஸ்டார்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் முதலில் துடிப்பெடுத்தாடிய காளிகிங்ஸ் அணியினர் 10 பந்து பரிமாற்றம் நிறைவில் 7 இலக்கினை இழந்து 63 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். காளிகிங்ஸ் சார்பில் துபி 24 ஓட்டங்களையும் கிருஷ்ணதீபன் 10 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் இணுவில் யுனைடெட் ஸ்டார் சார்பில் கயன்ராஜ் 2 பந்து பரிமாற்றங்களை வீசி 10 ஓட்டங்களை கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தியதுடன் தனுசன் 2 பந்து பரிமாற்றங்களை வீசி 13 ஓட்டங்களை கொடுத்து இரண்டு இலக்குகளையும் வீழ்த்தினர்.
64 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி களமிறங்கிய இணுவில் யுனைடெட் ஸ்டார்ஸ் அணியினர் 9.1 பந்து பரிமாற்றம் நிறைவில் 5 இலக்கினை இழந்து, 66 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கினர்.
இணுவில் யுனைடெட் ஸ்டார்ஸ் அணி சார்பில் அனோயன் 26 ஓட்டங்களையும் தனுஜன் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் காளிகிங்ஸ் சார்பில் அஜித் 2 பந்து பரிமாற்றங்களை வீசி, 12 ஓட்டங்களை கொடுத்து 2 இலக்குகளையும், அனுரங்கன் 2 பந்து பரிமாற்றங்களை வீசி 15 ஓட்டங்களை கொடுத்து 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இணுவில் யுனைடெட் ஸ்டார்ஸ் அணியினருக்கு நான்கு லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கிவைக்கப்பட்டது.