அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரப்பத்தனை, மன்றாசி நகர வர்த்தகர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் நகர வர்த்தகர்களும் பொது மக்களும் கலந்துகொண்டு பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனால் சிறு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் கூறுகையில்,
தைப்பொங்கல் வரவிருக்கிறது. இதற்கு பொங்கல் பொங்குவதற்கு சிவப்பு அரிசி முதலான அரிசி வகைகள் தேவைப்படுகின்றன. எனினும், அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது.
கட்டுப்பாட்டு விலைக்குத்தான் எங்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. அவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கொழும்பிலிருந்து இந்த பகுதிக்கு அரிசியை கொண்டுவருவதாக இருந்தால் போக்குவரத்து கட்டணம், சுமைதாங்கிகளின் கட்டணம் என பல விடயங்கள் இருக்கின்றன.
எனவே, கட்டுப்பாட்டு விலைக்கு விற்கமுடியாத சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும், அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.



