தனியார் வர்த்தகர்களுக்கு அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட காலவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதிக்குள் தனியார் வர்த்தகர்கள் 40,500 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாகவும், அவற்றில் 95 சதவீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளாகவும் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சந்தையில் நிலவிய அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசி இறக்குமதி மீது விக்கப்பட்டிருந்த வரையறை தற்காலிகமாக நீக்கப்பட்டு,தனியார் துறையினர் அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் இம்மாதம் 10 ஆம் திகதி அனுமதி வழங்கியது.
இதற்கமைய இக்காலப்பகுதியில் தனியார் தரப்பினர் இறக்குமதி செய்த அரிசி தொகையில் 75 ஆயிரம் கிலோ கிராம் அரிசி மனித பாவனைக்கு உகந்ததல்ல என்று கண்டறியப்பட்டு அவற்றை மீள் ஏற்றுமதி செய்யுமாறு குறித்த இறக்குமதியாளர்களுக்கு சுங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தனியார் துறையினர் வியாழக்கிழமை (19) வரையான காலப்பகுதியில் மாத்திரம் 40,500 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்துள்ளனர். இவற்றில் 17,500 மெற்றிக் தொன் பச்சை அரிசியும், 23,000 மெற்றிக் தொன் நாடு அரிசியும் உள்ளடங்குவதாகவும், 95 சதவீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அரிசி இறக்குமதியாளர்களுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில் அரிசிக்கான கேள்வியை கருத்திற் கொண்டு காலவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.