இந்தக் கோவிலுக்கு, 20 நிலைகள் கொண்ட உயரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் உச்சியில் இருந்து மிகப்பெரிய சிவன் சிலையையும், கடற்கரை அழகையும் பார்க்கும் வகையில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், அரபிக்கடலின் ஓரத்தில் அழகுற அமைந்துள்ளது.
சிவபெருமானே நம்மை வியக்க வைக்கும் சக்தி படைத்தவர்தான். அதோடு அவரது ஆலயமும் வியக்க வைக்கும் வகையில் அமைந்தால், அது பார்ப்பதற்கு எவ்வளவு சிறப்பாக இருக்கும். அப்படி ஒரு ஆலயம்தான், ‘முருடேஸ்வரர் திருக்கோவில்.’திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வேலைவாய்ப்பு ஏற்படவும், கல்வியில் மேம்படவும் இங்கு பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள். இதற்காக 108 கலச அபிஷேகமும் செய்யப்படுகிறது.
சிவபெருமானிடம் இருந்து பிராண லிங்கத்தைப் பெற்ற ராவணன், அதை இலங்கையில் நிறுவ எடுத்துச் சென்றான். அப்போது விநாயகர், சிறுவன் வேடத்தில் வந்து, ராவணன் சந்தியா கால பூஜை செய்யும் நேரத்தில் சிவலிங்கத்தை இங்கே நிறுவியதாக தல வரலாறு சொல்கிறது.
இங்குள்ள இறைவனின் பெயர் ‘முருடேஸ்வரர்.’ இங்கு 123 அடி உயரத்தில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் இவர் காட்சி தருகிறார்.
பெரிய சிவன் சிலைக்கு கீழே திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிவ-பார்வதி சன்னிதிகள், கணபதி, ஆஞ்சநேயர், முருகன், நவக்கிரக சன்னிதி, தத்தாத்ரேயர், சனீஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. சிவ-பார்வதியை, ராமர், சீதா, லட்சுமணர் பூஜிப்பது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
முருடேஸ்வரர் சன்னிதியில் அணையா விளக்கு ஒன்று உள்ளது. பக்தர்கள் இந்த விளக்குக்கு எண்ணெய் ஊற்றி, காணிக்கை செலுத்தி, தீபத்தில் தங்கள் முகத்தைப் பார்க்கிறார்கள். இதனால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவிலுக்கு, 20 நிலைகள் கொண்ட உயரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இது 237.5 அடி உயரம் கொண்டது. இந்தக் கோபுரத்தின் உச்சியில் இருந்து மிகப்பெரிய சிவன் சிலையையும், கடற்கரை அழகையும் பார்க்கும் வகையில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
எம பயம் மற்றும் நோய் தீர்க்கும் வல்லமை படைத்தவராக இத்தல ஈசன் விளங்குகிறார். இங்கு சிவனுக்கும், பார்வதிக்கும் ‘ருத்ர அபிஷேகம்’ செய்யப்படுகிறது.
இங்கு குடும்பமாக வருபவர்களுக்கு ‘சர்வதேவ பூஜை’ செய்யப்படுகிறது. இது ஒரு தோஷ நிவர்த்தி பூஜையாகும். இந்த பூஜையின் போது, எள், நெய், வெல்லம், பச்சைப் பயறு, ஏலக்காய் பொடி கலந்த ‘பஞ்ச கஜ்ஜாய பிரசாதம்’ படைக்கப்படுகிறது.
கோவிலைச் சுற்றிலும், ராவணவன் விநாயகரிடம் சிவலிங்கத்தைக் கொடுக்கும் காட்சி, கயிலையில் சிவன் வீற்றிருக்கும் காட்சி, தேரில் அமர்ந்தபடி அர்ச்சுனுக்கு கிருஷ்ணன் கீதையை உபதேசிக்கும் காட்சி உள்ளிட்டவை அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் தை மாதம் முதல் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் விசேஷமானது. அதே போல் தேரோட்டம், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீப விழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா என்ற மாவட்டத்தில் பாட்கல் என்ற கிராமத்தில் முருடேஸ்வரர் கோவில் இருக்கிறது.