நாடு முழுவதும் இன்று காலை 8 மணி முதல் சுழற்சி முறையிலான பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே, அந்தச் சங்கத்தின் செயலர் மருத்துவர் நவீன் டி சொய்சா இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவித்தாவது-,
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன செவிசாய்க்காமை, சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காமை, மருத்துவ கல்வியில் குறைந்தபட்ச தகுதி தொடர்பில் எழுந்துள்ள குறைபாடுகள் போன்றன தொடர்பிலேயே நாம் பணிப் புறக்கணிப்புக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளோம்.
நாட்டில் தற்போது மருத்துவத் துறையில் பெரிய ஒழுங்கீனங்கள் ஏற்பட்டுள்ளன. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர்களை மருத்துவ சட்டத்தின்கீழ் உள்வாங்க முயற்சித்தல், மருத்துவ சேவையில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமை உள்ளிட்ட பிரதான 6 காரணிகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று நலன்புரி அரசாக வெளிக்காட்டிக்கொள்ளும் கூட்டு அரசு இன்று கல்வியைப் பணத்துக்காக விற்று வருகின்றது. இலவசக் கல்வி என்பது நாட்டின் அரச தலைவரினதோ, தலைமை அமைச்சரினதோ அல்லது அரசியல்வாதிகளுடைய சொத்துகளோ அல்ல. பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே மாலபேயில் இயங்கும் தனியார் பல்கலைக்கழகத்தை மூடுமாறு கூட்டு அரசிடம் கோருகின்றோம்.
நல்லாட்சி அரசால் தொடர்ந்தும் அரச மருத்துவத் துறையினருக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி மருத்துவத்துறையை சுயாதீனமாக இயங்கவிடாமல் தடைசெய்கின்றனர்.
முழுமையாக மருத்துவ அறிவைப் பெறாதவர்களை மருத்துவர்களாக மருத்துவச் சட்டத்தின் மூலம் உள்வாங்குவதனால் நாட்டின் மருத்துவத்துறைக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் – என்றார்.