மக்கள் எதிர்கொண்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்குமாறும் , தோல்வியை ஏற்றுக் கொண்டு அரசாங்கத்தை பதவி விலகுமாறும் வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
அதற்கமைய ஜே.வி.பி.யின் முதலாவது ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை (17) மாலை 3 மணிக்கு களுத்துறை நகரத்தில் இடம்பெறவுள்ளது.
இதே வேளை வெள்ளிக்கிழமை (18) மாலை 3 மணிக்கு கொழும்பு – புறக்கோட்டையில் ஜே.வி.பி. இளைஞர் அணியினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை நுகேகொடையிலும் , 29 ஆம் திகதி பொலன்னறுவை மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டம் விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியதாகக் காணப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது.
டொலர் நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளின் காரணமாக நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
சமையல் எரிவாயு, எரிபொருள், பால்மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்கிறது.
இதனால் மக்கள் அரசாங்கத்தின் மீது பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினரால் நேற்று செவ்வாய்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே ஜே.வி.பி.யும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]