அரசுக்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஒலிம்பியரும் ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றவருமான சுகத் திலக்கரட்னவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கையின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் அண்மையில் சுதந்திர சதுக்கத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினர். அந்த ஊடக சந்திப்பில் 48 வயதான சுகத் திலக்கரட்னவும் கலந்துகொண்டிருந்தார்.
அதன் பின்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் அவரை மிரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுகத் திலக்கரட்னவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலேயே தொழில்புரிந்து வருகிறார்.
சக ஊழியர்கள் தன்னை மிரட்டியதாக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சுகத் திலக்கரட்ன முறைப்பாடு செய்தததை அடுத்து அவரை மிரட்டியதாகக் கூறப்படும் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
‘என்னை மிரட்டியவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களாவர். அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டாம் என அவர்கள் என்னிடம் கோரினர். அத்துடன் ‘கோ ஹோம் கோட்டா’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டாம் எனவும் என்னை கோரினர். நான் எந்த அரசியல் கட்சியினதும் உறுப்பினர் அல்ல. நான் அரச நிறுவனம் ஒன்றில் தொழில்புரியும் சாதாரண இலங்கை பிரஜை. எது தவறோ அதற்கு எதிராக குரல் கொடுப்பது எனது உரிமை’ என சுகத் திலக்கரட்ன தெரிவித்துள்ளார்.
தன்னை வாய்மொழிமூலம் அச்சுறுத்திய அதே குழுவினர் தன்னை தாக்க முற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மஸ்கெலியா, நோட்டன் பிரிட்ஜ்ஜை பிறப்பிடமாகக் கொண்ட சுகத் திலக்கரட்ன, அட்லான்டா 1996 ஒலிம்பிக், சிட்னி 2000 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் போட்டியிட்டார்.
தாய்லாந்து, பாங்கொக் 1998 ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் சுவீகரித்ததுடன் அதேவருடம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் அவர் பிரபல்யம் பெற்றார்.
மேலும் இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவராக தெரிவாகி 2015 முதல் 2017 வரை சுகத் திலக்கரட்ன பதவி வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]