அரசாங்கம் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டாலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஐந்து சதம் கூட கோவிட் நிதிக்காகக் குறைக்கப்படாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மேலதிக நேரம் மற்றும் கூட்டு கொடுப்பனவுகள் போன்ற கொடுப்பனவுகளில் தாக்கம் ஏற்படலாம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரசாங்கம் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கிறது. குறிப்பாக அந்நிய செலாவணி பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். கோவிட் 19 தொற்றுநோயால் எங்கள் ஏற்றுமதி வருவாய் ஓரளவு குறைந்துவிட்டாலும், அந்த சுமையை பொதுமக்களுக்கு வழங்க நாங்கள் தயாராக இல்லை.
இந்த தொற்றுநோயுடன் பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து நாங்கள் பெரும்பாலான நேரத்தை அமைச்சரவை விவாதங்களில் செலவிடுகிறோம். அரசு பொது ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதம் குறைக்கப் போகிறது என்று சிலர் கருத்தை பரப்பியுள்ளனர்.
ஆனால் இந்த கடினமான நேரத்தில் பொது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஐந்து சதம் கூட நாங்கள் கழிக்க மாட்டோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.