அரச உத்தியோகத்தர்கள் நாட்டுக்கு சுமை என்று இதுவரைக் காலமும் கூறி வந்த அரசாங்கம் தற்போது அவர்கள் மீது கரிசணை காட்டுகின்றது. இது முற்று முழுதாக சந்தர்ப்பவாதமாகும். நாமும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கேகாலை மாவட்டம், வரகாப்பொல தொகுதியில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச உத்தியோகத்தர்களை நாட்டுக்கு சுமையாகவே இதுவரை காலமும் உள்ள அரசாங்கங்கள் பார்த்து வந்தன. ஆனால் இப்போதுதான் இந்த அரசாங்கத்துக்கு அரச உத்தியோகத்தர்கள் முக்கியத்துவமானவர்களாகியுள்ளனர். இது சந்தர்ப்பவாதமாகும். தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்களை ஏமாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் அரசு சேவை பயனற்றது என்றும் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் அவர்கள் நாட்டின் நாட்டிற்கு சுமை என்றும் கூறினார்கள். ஆனால் இன்று அதே நபர்கள் போலியான வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் அவ்வாறு போலியான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். கூறும் அனைத்தையும் நடைமுறையில் செய்து காட்டுவோம்.
எமது ஆட்சியில் வாழ்க்கை செலவுக்கு சமமாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பிரத்தியேக குழு ஒன்று நியமிக்கப்படும். 2025 ஜனவரி முதல் சகல அரச உத்தியோகத்தர்கள் அடிப்படை சம்பளமும் 24 சதவீதத்தால் அதிகரிக்கப்படும். தற்போது அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் ஆகக்குறைந்த 17 500 ரூபாய் வாழ்க்கை செலவு கொடுப்பனவானது 25 000 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்.
அதற்கமைய சகல கொடுப்பனவுகளும் உள்ளடங்களாக அரச உத்தியோகத்தர்களுக்கு ஆகக் குறைந்த மாத சம்பளமாக 57 500 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுப்போம். தற்போது நடைமுறையில் உள்ள 6 – 36 சதவீத வருமான வரியை 1 – 24 சதவீத வீதம் வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.