தற்போதைய கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், அடுத்தவாரம் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள அமைச்சர்கள் குழுவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக- எதிர்க்கட்சியில் அமர்வதே தமது நோக்கம் என்றும், தமது நகர்வு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதல்ல என்பதை இந்தச் சந்திப்பின் போது விளக்கிக் கூறவுள்ளதாகவும், அந்த பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சர்களாக பதவி வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு, மூன்று அமைச்சர்களே தலைமை வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விட்டு வெளியேறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் குழுவுடன் இணைந்து செயற்பட, ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
“இன்னும் இரு பௌர்ணமிகளின் பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளது. ஒரு அணி அரசியலமைப்பு சபையில் இருந்து கொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியலமைப்பைத் தடுப்பதே எமது திட்டம்” – மகிந்த ராஜபக்ச