ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை, பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 2 ஆம் திகதி (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெறும் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
மக்கள் போராட்டம் வெகுவிரைவில் கிளர்ச்சியாக வெளிப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சிவில் அமைப்புக்களின் தலைவர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் அந்த தடை ஒரு நபரின் அரசியல் பிரவேசத்திற்காக நீக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவருக்கு அரசியலில் செல்வாக்கு செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 இற்கும் அதிகமானோர் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே நிறைவேற்றப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல் இடம்பெறும் போது அரசியலமைப்பின் 19ஆவது திருத்தமே நாட்டில் நடைமுறையில் இருந்தது,ஆகவே தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 19ஆவது திருத்தத்திற்கு கட்டுப்பட வேண்டும்.
இரட்டை குடியுரிமையினை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவ்விடயம் குறித்து சபாநாயகர் விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும். உண்மைகளை மறைத்துள்ளமை மக்களாணைக்கு முரணானதாகும்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மக்கள் போராட்டம் கிளர்ச்சியாக வெளிப்படும். எரிபொருள்,எரிவாயு விநியோக கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது,இனி எந்த பிரச்சனையும் இல்லை என அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.
மக்கள் தமது தொழிற்துறை மற்றும் சேவை நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதனால் பொருளாதார பாதிப்பு வெகுவிரைவில் பன்மடங்கு தீவிரமடையும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கம் நாட்டு மக்களை அச்சுறுத்துகிறது.அரசாங்கத்திற்கு எதிராக போராடுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக புதன்கிழமை கொழும்பில் இடம்பெறும் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.