அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இரத்தினபுரி நகரில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட14 கூட்டுத் தொழிற்சங்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பெருந்திரளான அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு இரத்தினபுரி நகரில் ஊர்வலமாகச் சென்றனர். இறுதியில் அவர்கள் இரத்தினபுரி மணிக்கூட்டு கோபுரத்தின் அருகே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.