அரசாங்கத்தின் கீழ் தரமான அரசியலால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் தற்போது தடுப்பூசி அரசியலே காணப்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளது.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ,
தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வேலைத்திட்ட திட்டமிடல்களும் காணப்பட்டன. அந்த வேலைத்திட்டங்களுக்கு அமையவே தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
உலகின் பல நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வேலைத்திட்டங்களையே ஏற்றுக் கொண்டுள்ளன. இவற்றை இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் அரசாங்கத்தின் கீழ் தரமான அரசியலால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி என்பது நாட்டு மக்களின் உரிமையாகும். ஆனால் தற்போது அவற்றை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுக்க தவறியமை தொடர்பில் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.