நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக புதிய பிரதமர் ஒருவர் தொடர்பில் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளன.
இதற்காக வேண்டி ஐக்கிய தேசிய முன்னணியில் மூவரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. திலக் மாரப்பன, ரன்ஜித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்மொழியப்படுகின்றன.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்குவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு எந்த ஒருவரும் ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்தோ, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தோ பிரதமர் பதவியை ஏற்பதில்லையென ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
இந்தப் பின்னணியில்தான், எந்தவொருவரும் எதிர்பாராத ஒருவர் புதிய பிரதமராக ஜனாதிபதியினால் அறிவிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன நேற்று முன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் எனவும் கூறப்படுகின்றது.