பாரதூரமான வழக்குகள் உள்ள அரசியல் கைதிகள் ஒவ்வொருவர் தொடர்பிலும் நாளை செவ்வாய்க் கிழமை, நீதி அமைச்சில் சட்டமா அதிபருடன் நான் கலந்துரையாடவுள்ளேன். ஆனால் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு இதில் உடன்பாடு இல்லை. அரசியல் கைதிகள் விடயத்தில் அரசியல் ரீதியான தீர்மானமே எடுக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசியல் கைதிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் விடுதலை தொடர்பில் கடந்த புதன் கிழமை பேச்சு நடத்தப்பட்டது. கூட்டு அரசு ஆட்சிக்கு வந்தபோது, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக பெருமளவானோர் மறுவாழ்வு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தற்போதுள்ளவர்கள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.
அவர்கள் ஒவ்வொருவரதும் வழக்குகளை தனித் தனியாக ஆராய்ந்து அவர்களை எவ்வாறு விடுவிக்கலாம் என்பது தொடர்பில், நாளை செவ்வாய்க் கிழமை பேச்சு நடத்தவுள்ளோம். நீதி அமைச்சர் தலதா மற்றும் சட்டமா அதிபருடன் நானும் அந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளேன்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு இதில் உடன்பாடு இல்லை. அவரைப் பொறுத்தவரையில், அரசியல் கைதிகள் விடயத்தில் அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். அதுவே நிலைப்பாடு. இது தொடர்பில் அரச தலைவருடன் பேச்சு நடத்தப்படும் – என்றார்.