இளைப்பாறிய நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களை இலங்கை அரசியலுக்கு அழைத்து வருகிற முயற்சிகளில் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
தற்பொழுதுள்ள தமிழ் தலைமைகள் அனைத்துமே தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் அற்றதாக மாறி வருகின்ற இந்தக் காலகட்டத்தில், இளஞ்செழியன் போன்ற தன்னலமில்லாத ஒருவர், குறிப்பாக தமிழ் மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒருவர் தமிழ் மக்களைத் தலைமை தாங்க முன்வர வேண்டும் என்பதே சில சிவில் சமூக அமைப்புக்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
அடுத்ததாக தமிழ்க் கட்சிகள் சிதறுண்டு தமிழ் மக்களின் வாக்குகள் சிதறி தமிழ் மக்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழந்து வருகின்ற இந்த ஆபத்தில் இருந்து தமிழ் மக்களை மீட்பதற்கு இளஞ்செழியன் போன்ற ஒருவரது அரசியல் வருகை மிக மிக அவசியம் என்றே கூறுகின்றார்கள் சில புத்திஜீவிகள்.
இந்த விடயம் பற்றி எம்முடன் பேசிய ஒரு பேராசிரியர், ‘ஈழத் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகர் என்று கூறப்படுகின்ற யாழ்ப்பாணத்தை சில தற்குறிகள் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியது போன்ற அவலங்கள் தமிழ் மக்களை விட்டு நீங்கிச் செல்லவேண்டுமானால், இளஞ்செழியன் போன்ற தலைவர்கள் தமிழ் மக்களைத் தலைமைதாங்க முன்வரவேண்டும்.
வடக்கு கிழக்கு என்று அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக இளஞ்செழியன் அவர்கள் இருப்பதால் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் பணிக்கு மிகவும் உசிதமானவர் இளஞ்செழியன்தான்’ என்று தெரிவித்தார்.
சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இளஞ்செழியன் அவர்களை அரசிலுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகின்றது.
ஏற்கனவே தனித்துவத்தை இழந்து தமிழ்மக்கள் மத்தியில் அம்மணமாக நிற்கும் அரசியல் கட்சிகளுக்குள் நுழைந்து தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளாமல், இதுவரை எப்படி ஒரு சீங்கம் போன்று கம்பீரமாக வலம் வந்துகொண்டிருந்தாரோ அதேபோன்று அரசியலுக்குள்ளும் கட்சிகள் அனைததையும் அரவனைத்துக்கொண்டு முன்னே நடக்கின்ற ஒரு தலைவராக இளஞ்செழியன் தமிழர் அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்பது தான் பெரும்பாண்மையான தமிழ் மக்களின் விரும்பமாக இருக்கின்றது.