அரசியலில் பரம வைரிகளான ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் பி குழுவுக்கான உலகக் கிண்ண முதல் சுற்றின் கடைசி லீக் போட்டியில் ஒன்றையொன்று இன்று எதிர்த்தாடவுள்ளன. ஐக்கிய இராச்சிய நாடுகளான இங்கிலாந்தும் வேல்ஸும் மற்றைய லீக் போட்டியில் விளையாடவுள்ளன.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி நொக்-அவுட் சுற்றில் விளையாட தகுதிபெறும். அதேவேளை, இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற இங்கிலாந்துக்கு ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவே தேவைப்படுகிறது..
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட அணிகளின் நிரல்படுத்தலுக்கு ஏற்ப அணிகளுக்கான குலுக்கல் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டபோது ஒரே குழுவில் (பி) இடம்பெற்ற அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டியை முழு உலகும் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது.
இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் ஒரே ஒரு தடவை 1998 உலகக் கிண்ணப் போட்டியில் சந்தித்துக்கொண்டபோது 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஈரான் வெற்றிபெற்றிருந்தது. இரண்டு அணிகளும் விளையாடிய சிநேகபூர்வ சர்வதேச போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
எனினும் இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை ஈரானின் பெறுபேறுகளைவிட அமெரிக்காவின் பெறுபேறுகள் சிறப்பாக அமைந்துள்ளது.
இங்கிலாந்துடனான ஆரம்பப் போட்டியில் 2 – 6 என தோல்வி அடைந்த ஈரான், அதன் 2ஆவது போட்டியில் வேல்ஸை 2 – 0 என வெற்றிகொண்டிருந்தது.
வேல்ஸ், இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுடனான போட்டிகளையும் அமெரிக்கா வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டுள்ளது. அந்த இரண்டு போட்டிகளில் மிகவும் திறமையாக விளையாடிய அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறவும் 24 வருடங்களுக்கு முன்னர் உலகக் கிண்ணப் போட்டியில் ஈரானிடம் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்துகொள்ளவும் கடுமையாக முயற்சிக்க உள்ளது.
அல் துமாமா விளையாட்டரங்கில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெறும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோல்வி அடையும் அணி முதல் சுற்றுடன் நாடு திரும்ப வேண்டிவரும் என்பதை இரண்டு அணிகளும் அறிந்துள்ளதால், கடுமையாக மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் அரசியல் கொந்தளிப்பு குறையாத நிலையில் ஈரான் கொடியின் மாற்றி அமைக்கப்பட்ட வடிவத்தை தனது சமூக ஊடகங்களில் அமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளனம் பதிவிட்டிருப்பதால் கடந்த வார இறுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இந்த செயல் ஈரான் கால்பந்தாட்டத் தலைமைகளை கோபாவேசம் அடையச் செய்துள்ளது. இதனை அடுத்து அமெரிக்கா மீது தடை விதிக்கவேண்டும் என பீபாவை ஈரான் கால்பந்தாட்ட தலைவர்கள் நிர்ப்பந்தித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஈரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பெண்களுக்கு ஆதரவு காட்டும் ஒரு செயலாகவே அந்தக் கொடி மாற்றி அமைக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. எனினும் அவற்றில் பல பதிவுகளை அமெரிக்கா நீக்கிக்கொண்டுள்ளது.
இந் நிலையில் இந்தக் கொடி விவகாரம் தங்கள் அணியில் உள்ள எவருக்கும் தெரியாது எனவும் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டியின்போது அது அரசியல் காரணியாக அமையாது எனவும் அமெரிக்க கால்பந்தாட்டப் பயிற்றுநர் க்ரெக் பேர்ஹோல்டர் தெரிவித்தார்.
இந்த கொடி விவகாரம் தமது வீரர்களை சிற்றம் அடையச் செய்து போட்டியின் போது ஊக்கப்படுத்தும் என வெளியாகும் கருத்துக்களை கவனத்தில்கொள்ளப் போவதில்லை என ஈரான் பயிற்றுநர் கார்லோஸ் குவிரோஸ் கூறினார்.
இங்கிலாந்தை வீழ்த்த வெல்ஸுக்கு அதிசயம் தேவை
இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் வேல்ஸ் வெற்றிபெறுவதற்கு அவ்வணிக்கு அதிசயம் தேவைப்படும் என பரவலாகக் கூறப்படுகிறது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி அஹ்மத் பின் அலி விளையாட்டரங்கில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெறவுள்ளது.
ஈரானை தனது ஆரம்பப் போட்டியில் 6 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்த இங்கிலாந்து, தனது இரண்டாவது போட்டியில் பிரகாசிக்கத் தவறியது. இதன் காரணமாக அமெரிக்காவுடனான அப் போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
மறுபுறத்தில் அமெரிக்காவுடனான போட்டியை 1 – 1 என வேற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட வேல்ஸ், இரண்டாவது போட்டியில் ஈரானிடம் 0 – 2 என தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டிகளின் பெறுபேறுகளை ஒப்பிட்டு நோக்குகையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து இலகுவாக வெற்றிபெறும் என எண்ணத்தோன்றுகிறது.
இரண்டாம் சுற்றை கருத்தில் கொண்டு இன்றைய போட்டியில் சில முக்கிய வீரர்களுக்கு இங்கிலாந்து பயிற்றுநர் ஓய்வு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் தேவை ஏற்படின் அவர்களை மாற்றுவீரர்களாக பயிற்றுநர் பயன்டுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.