நடிகர் கமல்ஹாசனுக்கு இன்றைக்கு 63-வது பிறந்தநாள். சென்னையில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாடப்போவதில்லை என அறிவித்த நடிகர் கமல்ஹாசன், ஆவடியில் மருத்துவ முகாமை நடத்துகிறார்.
அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா? என்பதையே இன்னும் ரஜினிகாந்த் அறிவிக்காத நிலையில், ட்விட்டரில் சிறு சிறு விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றெல்லாம் அறிவித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்.ட்விட்டரில் அரசியல் செய்யலாம் களத்தில் இறங்குவதுதான் கடினம் என பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சித்துவந்த நிலையில், எண்ணூர் துறைமுகம் கழிமுக பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.
இந்த வேகம் கமலின் அரசியல் பிரவேசம் உறுதியாகிவிட்டது என்றே கூறக்கூடிய அளவுக்கு அவர் அடுத்தடுத்தக் கட்ட நகர்வுகளுக்கு முன்னேறி வருகிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என பலரும் தமிழ் கலைத்துறையின் வாரிசுகளே. அந்த வகையில் கலைத்துறையில் இருந்து அரசியல் களத்துக்கு அடுத்த வாரிசாக வருகிறார் கமல்ஹாசன்.
தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்த அத்தனை பேரும் கொடிகட்டி பறக்கவில்லை. ரசிகர்களின் எண்ணிக்கை எல்லாம் வாக்குகளாக மாற வேண்டிய அவசியம் இல்லை. அடிப்படையில் ரசிகனுக்கும் தொண்டனுக்கு நிறையவே வித்தியாசம் இருக்கிறது எனக்கூறும் அரசியல் விமர்சகர் ஒருவர் ரசிகனை அரசியல் தொண்டனாக்க அதிக மெனக்கிடல் தேவை என்கிறார்.
தியேட்டர்களில் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் என்று இருக்கும் ரசிகர்களை கட்சி மாநாடுகளுக்கும் களப் பணிக்கும் ஏற்றவாறு மாற்றுவது சற்று கடினமான பணியே என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.
ஆனால், இது ஆகப்பெரிய சவாலாக இருக்காது. ரசிகர்கள் மன்றங்களை களைத்துவிட்டு நற்பணி மன்றங்களாகவே இயக்கிவருவதால் தன்னைப் பின் தொடர்வோர் எப்போதுமே களப் பணிக்கு தயாராக இருப்பார்கள் என்பதே கமலின் கணிப்பாக இருக்கிறது.
ஆளுங்கட்சியை வெளிப்படையாக விமர்சிப்பது, களத்தில் இறங்குவது என ரஜினியை முந்திக் கொண்டிருக்கும் கமலின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என வாக்காளப் பெருமக்களாகிய நீங்களே கணித்துக் கூறுங்களேன்..
அரசியலில் கமல் எம்ஜிஆர் போல் ஜொலிப்பாரா இல்லை சிவாஜி போல் ரசிகர்கள் எண்ணிக்கையை வாக்குவங்கியாக மாற்ற முடியாது திணறுவாரா?
அதிமுக பாஜகவின் பி டீம் என மக்களே விமர்சிக்கும் நிலையிலும் திமுகவின் செயல்தலைவர் இன்னும் விறுவிறுப்பாக செயல்படவேண்டும் என்ற விமர்சனங்கள் நிலவும் சூழலிலும் தேமுதிகவின் ‘கேப்டன்’ உரக்க பேசப்படாத நிலையிலும் கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவாரா? விவாதிக்கலாம் வாங்க.