அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நோக்கம் இருக்குமாயிருந்தால் அதனை தேர்தல் முறைகள் தொடர்பான திருத்தத்துடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அதற்கு அப்பால் சென்று புதிய அரசியலமைப்பை கொண்டு வர வேண்டிய எந்தவொரு அவசியமுமில்லையெனவும் அமரபுர நிக்காய உள்ளிட்ட மேலும் சில பௌத்த பீடங்களைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் பௌத்த சம்மேளனத்தில் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த பிக்குகளினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமரபுர நிக்காய துணைத் தலைவர் திருகோணமலே ஆனந்த தேரர் , பேராசிரியர் வெல்லன்வில விமலரட்ண தேரர் ,மாத்தளை தம்ம குசல தேரர் , பலாங்கொட சோபித தேரர் , திவியாயக்க யசஸ்சி தேரர் ஆகியோர் கலந்துகொண்டு தமது நிலைப்பாடுகளை தெரிவித்தனர்.
இதன்போது அங்கு உரையாற்றிய அமரபுர நிக்காய துணைத் தலைவரான திருகோணமலே ஆனந்த தேரர் தெரிவிக்கையில்;
நாட்டிலுள்ள தமிழ் மக்களில் 32 வீதமானவர்கள் மட்டுமே வடக்கில் இருக்கின்றார்கள். மிகுதி 68 வீதமானவர்கள் வடக்கிற்கு வெளியிலேயே இருக்கின்றனர். இங்கு ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை. முழு நாட்டு மக்களுக்கும் ஏற்ற நிர்வாக முறையே எமக்குத் தேவை.
இன்னும் அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை என கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமாக இல்லை. குறிப்பாக இங்கு அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தேசியக் கொள்கைகள் தொடர்பான நிபுணர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
அத்துடன், இந்த மாத இறுதியில் பாராளுமன்றத்தில் ஆவணமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அந்த ஆவணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இதன்மூலம் எமக்கு மறைத்து சில விடயங்களை செய்கின்றார்கள் என்பதுடன், திருட்டுத்தனமாக சில விடயங்களை நடத்துகின்றார்கள் என்பதனையும் புரிந்துகொள்ள முடிகின்றது.
இதேவேளை அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதனை தேர்தல் தொடர்பான திருத்தத்துடன் மட்டுப்படுத்திவிட வேண்டுமென நாங்கள் வலியுறுத்திக் கூறிக்கொள்கின்றோம்.
புதிய அரசியலமைப்புக்காக தற்போது முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிடுமாறும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட சகல உயர் மட்டத்தினருக்கும் நாங்கள் அறிவித்துக் கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் வெல்லன்வில விமலரட்ன தேரர் தெரிவிக்கையில்;
அரசியலமைப்பில் பிரதானமாக காணப்படும் “ஏகியராஜ்ய’ (ஒற்றையாட்சி) என்ற விடயத்தில் கைவைக்கத் தேவையில்லை. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசியலமைப்புக்கான யோசனைகள் பல கொண்டுவரப்பட்டன.
அதில் காணப்பட்ட விடயங்களே இதிலும் இருக்கின்றன. அன்று கொண்டுவரப்பட்ட யோசனையில் “ஏக்கிய’ என்பதற்கு ஆங்கிலத்தில் காணப்பட்ட “யுனிட்டரி’ என்பது “யுனைட்டெட் ஸ்ரீ லங்கா’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நாங்கள் எதிர்த்தோம்.
அதே வடிவில்தான் இப்போதும் வருகின்றது. இதில் தமிழ் வடிவமும் மாறியுள்ளது. “ஒருமித்த நாடு’ என்ற வசனம் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறாக புதிய வசனத்தை பயன்படுத்த காரணமானவர் யார் இந்த சொல்லை உருவாக்கியவர் யார்? பிரிந்து காணப்பட்டு பின்னர் இணைந்த நாடு என்ற அர்த்தத்தையே இது குறிக்கும். தமிழ் வித்துவான்களை கேட்டால் தெரியும்.
ஜனாதிபதியும் பிரதமரும் ஒருபோதும் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்க மாட்டோம் என தெரிவிக்கின்றார்கள். அவர்கள் அப்படி கூறும் போது எப்படியோ மேற்படி வசனத்தின் மூலம் சமஷ்டியை நோக்கி இறுதியில் போக முடியாமல் இல்லை என்பதனையே உத்தேச அரசியலமைப்பு காட்டுகின்றது.
சில தந்திரங்கள் மூலம் இந்த அரசியலமைப்பில் எமக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலான விடயங்களை உள்ளடக்கி நிறைவேற்றலாம் எனவும் அவர் தெரிவித்தார்.