அரசாங்கம் அறிவித்துள்ள அரச ஊழியர்களுக்கான 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு ஒரு கையால் கொடுத்து மறுகையால் வாங்குவதைப் போன்றது. எனவே, இதனால் அரச ஊழியர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை எனத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்கு நிலையான பொருளாதார அபிவிருத்தியை உருவாக்கும் எந்தத் திட்டமும், அரசிடம் இல்லை. இதனால் உற்பத்திகள் குறைவடைந்து விட்டன. பொருட்களுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. விலையும் அதிகரித்து விட்டது.
மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டு விட்டது. அரசிடம் இப்போது பாரிய நிதி நெருக்கடி காணப்படுகின்றது.
இதனைச் சமாளிக்கப் பெருமளவு ரூபா நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன. உற்பத்தி இல்லாமல் பணத்தை மட்டும் அச்சிடுவதால் பணவீக்கம் ஏற்படும். பொருட்களின் விலை பாரியளவு உயரும் என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகி விட்டது.
இவ்வாறு அச்சிட்ட பணத்தின் மூலம் தான் அரசாங்க ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்துள்ளது. அச்சிட்ட பணம் நடைமுறைக்கு வரும் போது பொருட்களின் விலை இன்னும் அதிகரித்து விடும்.
அப்போது இந்த சம்பள அதிகரிப்பினால் எந்தப் பிரயோசனமும் அரச ஊழியர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. மாறாக விலை அதிகரிப்பினால் 5 ஆயிரத்தை விட அதிக தொகையைப் பொருட்களுக்காகச் செலவிட வேண்டி வரும்.
மிக அண்மையில் தான் வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத் திட்டத்தில் சம்பள உயர்வு பற்றி அறிவிக்கப்படவில்லை.
இது இல்லாமலே அரசாங்கத்தின் செலவு விபரமும், வரவு விபரமும் அறிவிக்கப்பட்டதோடு துண்டு விழும் தொகையை ஈடு செய்யும் வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இப்போது அரசு அறிவித்துள்ள சம்பள அதிகரிப்பினால் ஏற்படும் செலவை ஈடு செய்ய அரசு என்ன செய்யப் போகின்றது என்பதைச் சிந்தித்துப் பார்த்ததால் பொருட்களின் விலை இன்னும் எவ்வளவு அதிகரிக்கப் போகின்றது என்ற உண்மை விளங்கும்.
வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக இல்லாத அக்கறை இப்போது எப்படி அரசாங்கத்திற்கு வந்தது. ஏன் வந்தது என்பதைக் கேட்க விரும்புகின்றேன். இப்போது விடிந்தால் எந்தப் பொருட்களின் விலை அதிகரித்திருக்கும் என்ற அச்சத்தினால் தான் மக்கள் தூக்கத்திற்குப் போகின்றார்கள்.
அந்த நிலை இன்னும் தொடரப் போகின்றது என்பதையே அரசாங்கத்தின் இந்த சம்பள அதிகரிப்பு சுட்டிக்காட்டுகின்றது. விலை அதிகரிப்பினால் நாட்டிலுள்ள சகல மக்களும் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, எல்லா மக்களுக்கும் பயன்தரக் கூடிய வகையில் உறுதியான பொருளாதாரத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]