தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் பணம் பெற்றதை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சவால் விடுத்துள்ளது.
தன்னை தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 2 கோடி ரூபாய் பணம் அரசிடம் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக தெரிவித்திருந்த நிலையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
வவுனியாவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் பணம் பெற்றதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் கிளிநொச்சி வட்டக்கச்சி பொது சந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அரசிடம் இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பணம் பெற்றதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் கொலை செய்தமையினையும், கொன்று குவித்தமையினையும் மக்கள் மறந்து விடமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இதே வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொள்வதற்கு பிரதான சூத்திரதாரி சிவசக்தி ஆனந்தன் தான் என சி.சிறிதரன் சாடியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அறிக்கைக்கு ஆணை கோரி தேர்தலில் வாக்களியுங்கள் என்று கோரியுள்ளனரா எனவும் அவ்வாறு கோரினால் அதனை உறுதிப்படுத்த முடியுமா என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கேள்வி எழுப்பியுள்ளார்.