பாராளுமன்றம் நேற்று கூடியபோது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், நாட்டின் நிலைமையை தெரிவித்து, இதற்கு தீர்வுகாணும் வரை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தனர்.
இவ்வாறு சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த 41 உறுப்பினர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச்சேர்ந்த 10 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச்சேந்த 14 பேரும் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளைச்சேர்ந்த 15 பேரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 பேரும் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் 156 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் 41 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்ததால் ஆளுங்கட்சியின் மொத்த உறுப்பினர்கள் 115 ஆக மாறி இருக்கின்றது. என்றாலும் இதனால் அரசாங்கத்தின் சாதாரண பெரும்பான்மை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அவர்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செற்படுவதற்காக தீர்மானித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களான, அனுரபிரியதர்ஷன யாப்பா, டபிள்யூ.டீ.ஜே செனவிரத்ன, சுசில் பிரேம ஜயந்த, சந்திம வீரக்கொடி, நளின் பெர்ணான்டோ, சுதர்ஷினி பெர்ணாடோபுள்ளே, பிரியங்கர ஜயரத்ன ஜயரத்ன ஹேரத், நிமல் லான்சா, மற்றும் ராேஷான் ரணசிங்க ஆகியோர் சுயாதீனமாக செயற்ட தீர்மானித்துள்ளதாக அனுர பிரியதர்ஷ்ன யாப்பா சபையில் அறிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அங்கம் வகிக்கும் 14உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படுவதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதன் பிரகாரம், மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, ரன்ஜித் சியம்பலாப்பிடிய,ஜகத் புஷ்பகுமார,ஷான் விஜயலால் த சில்வா, துஷ்மன்த மித்ரபால, அங்கஜன் ராமநாதன், சம்பத் தசநாயக்க, ஷான்த்த பண்டார, லசன்த்த அழகியவண்ண மற்றும் சுரேன் ராகவன் ஆகியோராவர்.
அத்துடன் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்திருக்கும் அரசாங்கத்தின் பங்காளி கட்சி உறுப்பினர்களான,விமல் வீரவன்ச,உதய கம்பமன் பில,வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டிரான் அலஸ், அதுரலிய ரத்தன தேரர், கெவிந்து குமாரதுங்க, வீரசுமன வீரசிங்க, அசங்க நவரத்ன, மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ, ஏ,எல்.எம். அதாவுல்லாஹ். ஜயந்த சமரவீர, உத்திக்க பிரேமரத்ன, காமினி வலேகொட ஆகியோர் சுயாதீனமாக செயற்படுவதாக விமல் வீரவன்ச சபைக்கு அறிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளி கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக மருதபாண்டி ராமேஷ்வரன் சபையில் அறிவித்தார். அதன் பிரகாரம் ஜீவன் தொண்டமான், மற்றும்மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகிய இருவருமாவர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ரிஷாத் பதியதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான எஸ்.எம்.முஷாரப் சுயாதீனமாக செயற்படுவதாக சபையில் அறிவித்தார்.
இவ்வாறு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக சபைக்கு அறித்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி அவர்களை வரவேற்றனர். இருந்தபோதும் அருந்திக்க பெர்ணாந்துவின் பெயர் சுயாதீனமாக செயற்படும் பட்டியலில் தெரிவிக்கப்பட்டபோதும் தான் அந்த பட்டியலில் இருப்பதில்லை என சபைக்கு அறிவித்தார் இதன் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி அவரை வரவேற்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]