65 பேர் கொண்ட எதிர்க்கட்சி அரசாங்கம் அமைத்தால் முதலாவது வரவு செலவு திட்டத்திலேயே தோற்கடிக்கப்படலாம்.
அதனால் எதிர்க்கட்சிக்கு அரசாங்கம் அமைக்குமாறு தெரிவிப்பது நடைமுறைச்சாத்தியமான தீர்வல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அத்துடன் அரசாங்கம் தொடர்பாக எந்த நம்பிக்கையும் சர்வதேசத்துக்கு இல்லை. அதனால் மக்கள் ஆணையை வெளிப்படுத்த இடமளிக்கப்படவேண்டும்.
அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுக்காவிட்டால் சபாநாயகரான உங்களது வீட்டை மக்கள் முற்றுகையிடுவார்கள் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வெளியில் இருந்து மக்கள் தெரிவிக்கும் விடயங்கள் இந்த பாராளுமன்றத்தில் பிரதிபளிக்கின்றதா என்பது தொடர்பாக நாங்கள் அனைவரும் மனசாட்சியை தொட்டு கேட்கவேண்டும்.
மக்களின் பிரச்சினைக்கு அரசாங்கம்தான் தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் எதிர்க்கட்சியின் தீர்வு என்ன என கேட்கமுடியாது.
உலகில் எந்த பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சியிடம் தீர்வு கேட்பதில்லை. அதேபோன்று எங்களை அரசாங்கம் அமைக்குமாறு ஆளும் தரப்பினர் கோரி வருகின்றனர். எமக்கு அரசாங்கம் அமைக்க முடியாது.
ஏனெனில் எங்களுக்கு 65பேரே இருக்கின்றனர். அவ்வாறு நாங்கள் அரசாங்கம் அமைத்தால் முதலாவது வரவு செலவு திட்டத்திலேயே எமது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும்.
ஆட்சி அமைக்க மக்கள் ஆணை கிடைத்தால் அதனை செய்ய வேண்டும். முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலகவேண்டும். அவ்வாறு இல்லாமல் எதிர்க்கட்சிக்கு அரசாங்கம் அமைக்குமாறு தெரிவிப்பது நடைமுறைச்சாத்தியமான தீர்வல்ல.
அத்துடன் ஆங்கில பத்திரிகை ஒன்று மேற்கொண்ட கருத்து கணிப்பில் 96வீதமானவர்கள் கோத்தாபய ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ் பதவி விலகவேண்டும் என தெரிவித்திருக்கின்றது. இதனையே வீதியில் போராடும் மக்களும் தெரிவிக்கின்றனர்.
இளைஞர்களின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வை அரசாங்கம் வழங்கவேண்டும்.அதனால் நாங்கள் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்திருக்கின்றோம். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பின்னர் நாங்கள் பாராளுமன்றத்துக்கு வருவது தொடர்பாக தீர்மானம் எடுக்கவேண்டி வரும்.
சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டை ஆட்சிசெய்த எந்த அரசாங்கமும் நாட்டை வங்குராேத்து நிலைக்கு ஆக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் நாட்டை வங்குராேத்து அடையச்செய்துள்ளது. நாட்டை வங்குராேத்து அடையச்செய்திருக்கும் இந்த அரசாங்கத்துக்கு நாட்டை நிர்வகிக்க எந்த அதிகாரமம் இல்லை. அரசாங்கம் தேசிய, சர்வதேச ரீதியில் பொய்யாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தொடர்பாக எந்த நம்பிக்கையும் சர்வதேசத்துக்கு இல்லை. அதனால் மக்கள் ஆணையை வெளிப்படுத்த இடமளிக்கவேண்டும். மக்கள் ஆணை மூலம் அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால், அந்த அரசாங்கத்துக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண மக்கள் ஒருவருடம்வரை காலம் வழங்கும்.
புதிய அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள சர்லதேச நாடுகளும் விரும்புகின்றது. எனவே நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு இதுவே தீர்வாகும். எமது நிலைப்பாடும் இதுவாகும்.
அதேபோன்று நாட்டை வங்குராேத்து அடையச்செய்த அரசாங்கத்துக்கு என்ன தண்டனை என நீதி அமைச்சரிடம் கேட்கின்றோம். ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு செல்ல முடியாது. அவர் எங்கு இருக்கின்றார் என தெரியாது. பிரதமர் வீட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.
எமது நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுக்காவிட்டால் சபாநாயகரான உங்களது வீட்டை மக்கள் முற்றுகையிடுவார்கள். அதனால் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.